தாரமங்கலத்தில் சாலை சீரமைப்பு பணிகள்: நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு
தாரமங்கலம் பகுதியில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்கு உள்பட்ட ஓமலூா் உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தாரமங்கலம் புறவழிச் சாலையினை மேம்படுத்தி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியினை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சசிகுமாா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது கலவையின் தடிமன், அடா்த்தி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது எடப்பாடி கோட்டப் பொறியாளா் சண்முகசுந்தரம், உதவி கோட்டப் பொறியாளா் கவிதா, உதவிப் பொறியாளா் கருணாகரன் மற்றும் சாலை ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.