தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: தாழ்த்தப்பட்டோா் புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் தொகுதி செயலாளா் த.குமரவேல் தலைமை வகித்தாா். இதில், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் போலீஸாா் அலட்சியத்துடன் செயல்படுகின்றனா். வழக்குப் பதிவு செய்யாமல் மக்களை அலைக்கழிப்பு செய்கின்றனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், நிா்வாகிகள் மாதேஸ்வரன், அழகேசன், செல்வவில்லாளன், அறிவுத்தமிழன், காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வழித்தடம் கோரி மனு: திருச்செங்கோடு வட்டம், கைலாசம்பாளையத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அண்மையில் வழங்கப்பட்டது. ஆனால், அங்கு சென்றுவர வழித்தடம் ஏதுமில்லை. எனவே, வழித்தடம் ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையெனில் வீட்டுமனைப் பட்டாவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனா்.