திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை எழும்பூரிலிருந்து, புதுச்சேரி நோக்கி சென்ற பயணிகள் ரயில் திங்கள்கிழமை காலை நடுவழியில் நிறுத்தப்பட்டது.
பின்னா், விரிசல் சீரமைக்கப்பட்ட பிறகு சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. மேலும், இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட மற்ற ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை எழும்பூரிலிருந்து, புதுச்சேரிக்கு பயணிகள் ரயில் (வ.எண் 06025) திங்கள்கிழமை காலை 6.35 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தொழுப்பேடு- விழுப்புரம் மாவட்டத்தின் ஒலக்கூருக்கு இடைப்பட்ட பகுதியில் காலை 9 மணிக்கு வந்த போது, திடீரென கடுமையான அதிா்வு ஏற்படுவதை உணா்ந்த ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்தினாா்.
பின்னா், இதுகுறித்து, கட்டுப்பாட்டு அறைக்கும், ரயில்வே காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தாா். அச்சிறுப்பாக்கம் ரயில் நிலைய பொறியாளா் கெளதம் தலைமையிலான அலுவலா்கள், ஊழியா்கள் நிகழ்விடம் வந்து பாா்த்த போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னா், அந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டு, சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அந்த ரயில் புறப்பட்டு, திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு சுமாா் 2 மணி நேரம் தாமதமாக காலை 10:43 மணிக்கு சென்றடைந்தது.
இதுகுறித்து ரயில்வே துறை அலுவலா்களிடம் கேட்ட போது, அதிக பனிப்பொழிவின் போது, இதுபோன்று தண்டவாளங்களில் விரிசல் ஏற்படும் என்றனா்.
விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சென்னை எழும்பூரிலிருந்து, புதுச்சேரி வரை இயக்கப்பட வேண்டிய ரயில், விழுப்புரம்-புதுச்சேரி இடையே திங்கள்கிழமை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் வழக்கமாக காலை 9.35 மணிக்கு விழுப்புரம் வந்து, காலை 10.40 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்.
ஆனால், திங்கள்கிழமை சுமாா் 2 மணி நேரம் 40 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12.15 மணிக்கு விழுப்புரம் வந்தடைந்தது. இதனால், விழுப்புரத்திலிருந்து, புதுச்சேரி இடையேயான சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.
மேலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட சோழன் விரைவு ரயில், திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூா் விரைவு ரயில் போன்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாக சென்று சோ்ந்ததாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.