செய்திகள் :

BB Tamil 8 Day 80: `எங்க அக்காவ திட்டாதீங்க' - நெகிழ்ந்த பவியின் தம்பி; அன்ஷிதா கேட்ட மன்னிப்பு

post image
வெவ்வேறு குடும்பங்கள், வெவ்வேறு கலாசாரங்கள், வெவ்வேறு உணர்வுகள். இவை அனைத்தையும் ஒன்றிணைக்கும் கலவையான மையமாக இன்றைய எபிசோடு இருந்தது, போட்டியாளர்கள், தங்களுக்குப் பிரியமானவர்களைக் காண்பதற்காக அடையும் ஆவல், பதட்டம், சஸ்பென்ஸ் போன்றவை நமக்குள்ளும் சிறிது தானாக கடத்தப்பட்டு விட்டன. அப்படி ஏதோவொரு தருணத்தில் நாமும் காத்திருந்திருப்போம்தானே?!

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 80

தனது வீட்டாரின் மூலமாக கிடைத்த ஃபீட்பேக் குறித்த கவலை ரயானிற்கு இருக்கிறது. ‘நீ தனியா விளையாடு. யார் கூடவும் சுத்தாத’ என்று சொன்னதால், சவுந்தர்யாவின் குடும்பம் வரும் போது என்ன நடக்குமோ என்று அவர் திகிலாக இருக்க, “நீ ஏண்டா பயப்படறே.. அப்படி ஒண்ணும் நடக்காது” என்று ஆறுதல் சொன்னார் சவுந்தர்யா. 

BBTAMIL 8: DAY 80

‘எனக்கொரு கேர்ள்பிரெண்ட் வேணுமடா’ மோடில் சுற்றிக் கொண்டிருந்த ராணவ், லுலுவாய்க்காச்சும் பவித்ரா அப்படி இருப்பாரா என்று சுற்றிச் சுற்றி வந்து இம்சை தந்து கொண்டிருந்தார் போலிருக்கிறது. “அவனுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்தேன். அதை அட்வான்டேஜா எடுத்துக்கறான். ஓவரா போகுது. இனிமே அவன் கூட பேசப் போறதில்லை. ஒரே வீட்ல எப்படி பேசாம இருக்கறது. பிரெண்ட்ஸா இருக்கலாம்ன்னு சொல்றான் ” என்று பவித்ரா தீபக்கிடம் புகார் கொடுத்துக் கொண்டிருக்க, “இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. சீரியஸ் மேட்டர்” என்றார் தீபக். அவருக்கும் ராணவ் மீது எரிச்சல் இருக்கிறது போல. 

மகளின் மீது நேர்மையான கமென்ட் சொன்ன சவுந்தர்யாவின் பெற்றோர்


அடுத்த விருந்தினர் வருகைக்கான நேரம். “உங்கள் வீட்டாரை எப்படி கூப்பிடுவீங்க. கூப்பிட்டுக் காட்டுங்க” என்று ஒவ்வொருவரின் ஆவலையும் கிளப்பி விட்டார் பிக் பாஸ் ‘உம்மி..” என்று என்று அன்ஷிதா கத்த “பானு” என்று பவித்ரா கத்த, ‘அம்மா.. அப்பா..’ என்று சவுந்தர்யா கத்தியதுதான் பூட்டிற்கான சாவி. சவுண்டின் பெற்றோர்கள் உள்ளே வந்தார்கள். அப்பா பெண்ணைக் கூட கட்டியணைக்காமல் நேராக போட்டியாளர்களிடம் சென்று கை கொடுத்ததில் ஒரு செய்தி இருந்தது. “செல்லம் கொடுத்து கெடுக்கும் அப்பா நானில்லை” என்று மறைமுகமாச் சொல்கிறாரோ?! 


“ஓ.. இதுதான் சவுந்தர்யா சமைச்ச இடமா?” என்று அந்த இடத்தை சுற்றுலாத்தளம் போல சுற்றிப் பார்த்தனர். “இதுவரைக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரல” என்று தீபக்கும்  காமெடியாக சான்றிதழ் தந்தார். பொதுவாக குடும்ப உறுப்பினர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சாதகமாகவும் மற்ற போட்டியாளர்களின் மீது புகாராகவும் பேசுவார்கள். ஆனால் சவுந்தர்யாவின் பெற்றோர் மிக நேர்மையாக, தங்களின் மகளிடமுள்ள குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டியது நல்ல விஷயம். 

BBTAMIL 8: DAY 80

“நிறைய விஷயங்களை நீ மாத்திக்கணும். அன்பு, பண்போட இருக்கணும். கால் மேல கால் போட்டு உக்கார்றது என்ன பழக்கம்?  முத்துக்குமரன் பார்த்துட்டு சொல்றாரு. மத்தவங்க கிண்டல் பண்ற மாதிரி நடந்துக்கக்கூடாது. உனக்கு வெளில பேரு நல்லாயிருக்கு. ஆனா இன்னும் மாத்திக்கணும். இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்காது” என்றெல்லாம் அட்வைஸ் செய்தார் அப்பா. “நீ வீட்ல இருந்த மாதிரி இங்க இல்லையே.. யார் பின்னாடியும் பேசக்கூடாது’ என்றார் அம்மா. “மத்தவங்களுக்கு அறிவில்லையா.. சென்ஸ் இல்லையான்னு கேக்கற.. நீ அப்படி இருக்கியா?” என்று இறங்கி அடித்தார் தம்பி.  “நீதான் straight forward-ஆன ஆளாச்சே.. அப்புறம் ஏன் பின்னாடி பேசற.. எதையாவது சொல்லிட்டு ‘அப்படி எனக்குத் தோணுது”ன்னு அலட்சியமா சொல்லிடற. ஒருத்தர் பேசுறதுல பாதியை மட்டும் கவனிச்சிட்டு கமெண்ட் பண்ற” என்று சவுந்தர்யா ரசிகர்களின் வசவுகளை வாங்கிக் கொள்ளுமளவிற்கு நிறைய உண்மைகளை பொதுவில் அம்பலப்படுத்தினார் தம்பி. 

‘மகளின் மீதுதான் முரண்பாடு’ - சவுண்டின் அப்பா அதிரடி


“ஏன் அந்த மாதிரில்லாம் ரியாக்ஷன் தரே. வீட்ல நீ அந்த மாதிரி இல்லையே?” என்று அம்மா சொன்ன போது ‘அவ்வளவும் நடிப்பா கோப்பால்?’ என்றுதான் தோன்றியது. “எனக்கு இரிடேட் ஆகுது” என்று சவுந்தர்யா சொல்ல “இது பிக் பாஸ் கேம். வேற எப்படி இருக்கும்?” என்று சரியாக மடக்கினார் தம்பி. “யாராவது பேசும் போது அவங்க முகத்தைப் பார்த்து பேசு. எங்கயோ பார்க்காத.. வெளில வந்தாலும் பிரெண்ட்ஸா இருக்கணும்” என்று அறிவுரைகள் தொடர்ந்தன. 

BBTAMIL 8: DAY 80

சவுந்தர்யா அப்பா செல்லமாம். அம்மாதான் ஸ்ட்டிரிக்ட்டாக இருப்பாராம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அப்படித் தெரியவில்லை. கனிவோடு கண்டிப்பையும் காட்டினார் அப்பா. ‘முரண்பாடு’ பற்றி பிக் பாஸ் கேட்ட போது ‘என் பொண்ணு கிட்டதான் முரண்பாடு’ என்று அவர் சொன்னது அல்டிமேட் நேர்மை. மற்ற எல்லோரையும் பற்றி பாசிட்டிவ்வாகவே பேசி விட்டு சவுந்தர்யாவின் பெற்றோர் சென்றார்கள். ‘ஒருவேளை தன் மீதுதான் தவறோ?” என்று யோசித்த சவுந்தர்யா, ஜெப்ரியின் தோளில் சாய்ந்து அழுதார். 

ராணவ்விடமே Prank செய்த தம்பி


ஜாக்குலின் பற்றி சவுண்டு பின்னால் பேசியது வெளியே வந்துவிட்டதால்,  அந்த மேட்டரை கிளியர் செய்து கொள்வதற்காக ஜாக்கை அழைத்தார் சவுந்தர்யா. இருவரும் பேசினார்கள்.. பேசினார்கள், அப்படிப் பேசினார்கள். இடையில் படுத்திருந்த ஜெப்ரியைப் போலவே நமக்கும் கொட்டாவி வந்தது. “நான் நடிக்கறேன்னு சொல்லியிருக்கே.. நடிக்கறவ கிட்ட ஏன் நீ இன்னமும் பிரெண்டா இருக்கணும். விலகிடலாம் இல்லையா?” என்பது ஜாக்கின் கேள்வி. “உன்னை எனக்குப் பிடிக்கும்” என்று சவுந்தர்யா சொல்ல “அப்படின்னா நேரா என் கிட்ட சொல்லு. டாஸ்க் பத்தி பேசு. ஆனா காரெக்டர் பத்தி பேசக்கூடாது. வேற யாரையோ பார்த்து நீ இன்ப்ளூயன்ஸ் ஆகற” என்று ஜாக் சொல்ல, சவுண்டு கண்கலங்க,  இருவரின் நட்பையும் நூற்றி பன்னிரெண்டாவது முறையாக ரென்யூவல் செய்து கொண்டார்கள். 

Prank செய்வதில் விருப்பமுள்ள ராணவ்விற்கு, அவரது குடும்ப வரவேற்பும் அதே போல் அமைந்தது. மருத்துவ சோதனை என்கிற பெயரில் உள்ளே வந்த தம்பியை அடையாளம் தெரியாமல் “டேய்.. நீயா டாக்டரு?” என்று அலறினார் ராணவ். அதற்கு காரணம் இருந்தது. “கைல கொஞ்சம் இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கு. வெட்ட வேண்டியிருக்கு” என்று அரத்தைத் தூக்கினார் தம்பி. “அப்பா வரலை” என்று தம்பி சொல்ல, ராணவ் அதற்கு அலட்டிக் கொள்ளவேயில்லை. எப்படியும் வருவார்கள் என்கிற பிக் பாஸ் தந்திரத்தை அறிந்தவராக இருந்தார். 

“ஓ… நீங்கதான் ராணவ்வோட தம்பியா.. கேக்கறதுக்கே மனசு கஷ்டமா இருக்கு” என்று பங்கமாக கிண்டலடித்தார் முத்து. பிறகு பாடல் ஒலிக்க, ராணவ்வின் பெற்றோர் உள்ளே வந்தார்கள். கையில் அடிபட்டிருந்த மகனைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டு அம்மா கண்கலங்கிய காட்சி நமக்கும் நெகிழ்வூட்டுவதாக இருந்தது. இரண்டு பேருமே முதலில் அருணிற்கு நன்றி சொன்னது சிறப்பான காட்சி. வரவேற்புக்குழு தலைவரான முத்து ‘பிக் பாஸ் வீடு உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்று இனிப்புடன் வரவேற்றார்.  “நாமினேஷன்ல  கூட இப்படி பயந்ததில்ல. இந்த ‘முரண்பாடு’ மேட்டரை நெனச்சாதான் ‘கெதக்’குன்னு ஆகுது” என்று மற்றவர்கள் பயத்துடன் பேசிக் கொண்டனர்.  குறிப்பாக சவுந்தர்யாவிற்கு உள்ளே உதைப்பு ஓடியிருக்கும். 

BBTAMIL 8: DAY 80

“நல்லாத்தான் பண்ற.. ஆனா ஏன் சரியா பதில் தர மாட்டேன்ற.. அதுலயும் வீக்கெண்ட்ல பயங்கரமா சொதப்பற. இத்தனைக்கும் நீ ஒரு லாயர். மத்தவங்க ஒப்பினியன் கேட்காத. நீயே சுயமா யோசிச்சி விளையாடு” என்று அப்பா அட்வைஸ் செய்ய “மண்டைக்குள்ள ஆயிரம் விஷயம் ஓடிட்டே இருக்கும். எதை மொதல்ல ரிலீஸ் பண்றதுன்னு குழப்பம் வந்துடுது” என்று பதிலளித்தார் ராணவ். “திரும்பிப் படுத்தியே.. வலிக்கலையா?” என்று கேட்பதன் மூலம்  பார்வையாளர்களின் அநாவசிய சந்தேகத்திற்கு பதில் தேட முனைந்தார் அம்மா. 

“ராணவ்  ஒரு லாயராமே - ஏன் சரியா பேச மாட்றீங்க?”


“நீ ஏதாவது பண்ணிட்டு ஸாரி கேட்டா கூட அவங்க சரியா ரெஸ்பாண்ட் பண்றதில்ல. அந்த மாதிரி ஆளுங்க கிட்ட ஏன் நீ போய் பேசற?” என்று கடிந்து கொண்டார் தங்கை. முரண்பாடு என்னும் வில்லங்கமான டாப்பிக். ‘ராணவ்விற்கு அடிபட்ட போது நடிக்கறான்’ என்று சொன்ன சவுந்தர்யா மீது புகார் வைத்த தங்கை “ஏன் ராணவ்ன்றதால மட்டும் இப்படியா.. ஏன் இத்தனை வன்மம்?” என்று அதிரடியாக கேட்க, பதிலளிக்க முடியாமல் சங்கடமான புன்னகையைத் தந்த சவுந்தர்யா “அவன் இப்படித்தான் ஏதாவது பண்ணுவான். அதான் அப்படி தோணிச்சு. மன்னிச்சிடுங்க” என்று விளக்கம் அளிக்க “மறுநாள் ஸாரி கேட்டுட்டா” என்று சவுண்டிற்கு ஆதரவு தந்தார் ராணவ். அந்தச் சமயத்தில் ஓடி வந்து உதவிய அருணை ‘தெய்வமாக’ப் பார்த்தார் ராணவ்வின் தந்தை. ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்ட அன்ஷிதாவிற்கும் ஸ்பெஷல் மென்சன் கிடைத்தது. 

BBTAMIL 8: DAY 80

இதே போல் அடிபட்ட விஷயத்தை  கிண்டலடித்த ஜெப்ரிக்கு கண்டனம் தெரிவிக்காமல் “ஜெப்ரி.. கில்டியா ஃபீல் பண்ணாத. என் பையனுக்கு தர்ற சப்போர்ட்டை உனக்கும் தருவேன்” என்று ராணவ்வின் தந்தை சொன்னது நல்ல விஷயம். ராணவ்வின் அம்மா மைக்கை சரியாக மாட்டாததற்காக, பக்கத்தில் இருப்பவர் டாஸ்க் செய்ய வேண்டும் என்கிற ஆட்டத்தை மியூசிக்கல் சேர் மாற்றி விளையாடினார்கள். கடைசியில், கராத்தே சாம்பியனான ராணவ்வின் தந்தை, பெண்களுக்கு கராத்தே பயிற்சி அளித்த காட்சி சுவாரசியமாக இருந்தது. விடைபெறும் போது “கோலமாவு கோகிலா படத்துல நயன்தாராவை விடவும் உங்களைத்தான் பிடிக்கும்” என்று அவர் ஜாக்குலினை நோக்கிச் சொன்னது நயன்தாரா காதில் விழாமல் இருக்க வேண்டும். “யாரும் ஹர்ட் ஆகலையே?” என்று சவுந்தர்யா உள்ளிட்ட அனைவரிடமும் கேட்டுக் கொண்டார் ராணவ். 

“நீ ஏன் கேப்டன் ஆகலை?” - கோபித்துக் கொண்ட பவியின் தம்பி


அடுத்ததாக ‘ரத்தத்தின் ரத்தமே.. இனிய உடன்பிறப்பே’ என்கிற பாடல் வந்த போதே, தெரிந்து போயிற்று, அது பவித்ராவின் தம்பியாக இருக்கலாம். “நீ ஏன் கேப்டன் ஆகலை.. அதுதான் எனக்கு வருத்தம்” என்று தம்பி சிணுங்க “அடுத்த முறை ஆயிடறண்டா தங்கம்” என்று செல்லம் கொஞ்சினார் பவித்ரா. “நீ நீயா இருக்கே” என்று சித்தி சொன்னதைக் கேட்டு பயங்கரமாக மகிழ்ச்சியடைந்தார் பவித்ரா. ராணவ் கூட சேர்த்து ஏதாவது கிசுகிசு வந்து விடும் என்று பயந்தாரோ, என்னமோ.  “வீட்லதான் வேலை செஞ்சிட்டே இருப்பே.. இங்கயுமா.. காமிரால எங்க பார்த்தாலும் ஏதாவது வேலை செய்யற” என்று சித்தி பையன் கோபித்துக் கொள்ள “எங்க அக்காவை திட்டாதீங்க” என்பது போல் பவியின் தம்பி கோபித்துக் கொண்டது சுவாரசியமான காட்சி.

BBTAMIL 8: DAY 80

 “யாரையாவது ஹர்ட் பண்ணிடுவோமோன்னு பயமா இருக்கு. அதான் பேசல. எனக்கே என் மேல டவுட் வந்துடுச்சு. நான் வளர்ந்த விதம் அப்படியான்னு” என்று பவித்ரா சொன்னது நேர்மையான கமெண்ட். ‘முரண்பாடு’ பற்றிய தலைப்பு வந்த போது ‘பெரிசா ஒண்ணுமே இல்லை” என்று வீட்டார் பேச மறுத்தார்கள். மஞ்சரி முட்டையைத் தடவியது மட்டுமே பிரச்சினை. அது கூட டாஸ்க் என்பதால் ஓகே என்பதாக இந்தப் பஞ்சாயத்து பெரிதாக வளரவில்லை. 

வருகிறவர்கள் அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவதில் தீபக் முன்னணியில் இருக்கிறார். முந்தைய சீசனில் வந்த ‘ஆரி’ போல  தீபக்கையே பலரும் முன்னுதாரணமாக சொல்கிறார்கள். பவித்ராவின் குடும்பத்தினர் ஒவ்வொருவர் பற்றியும் வரிசையாக கமெண்ட் சொன்னது ருசிகரமான காட்சி. ஒலி வடிவத்தின் வழியாக பவித்ராவின் அம்மாவும் பாட்டியும் வந்து கூடுதல் சர்ப்ரைஸ் தந்தார்கள். “உன்னை அப்படி வளர்த்தது எங்க தப்புதான். நல்லா விளையாடும்மா” என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு கலங்கிய பவித்ரா “அப்படில்லாம் இல்லை. நல்லாதான் வளர்த்திருக்கீங்க” என்று ஆறுதல் சொன்னார்.  ‘பவித்ரான்னா பிளவர்ன்னு நெனச்சீங்களா.. ஃபயரு” என்று புஷ்பா பன்ச் வசனத்தை தம்பி பேசிக் காட்டியதை எல்லோரும் ரசித்தார்கள். 

அன்ஷிதாவின் அண்ணன் அடித்த ரகளையான கமெண்ட்டுகள்


அடுத்த விருந்தினர் அன்ஷிதாவிற்கானது. ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்கிற பாடல் ஒலிக்க உணர்ச்சிப் பெருக்கில் தத்தளித்த அன்ஷிதாவின் க்ளோசப் காட்சிகளை நடிப்பில் நிகழ்த்தவே முடியாது. தன் அம்மா குலாமியைப் பார்த்ததும் ‘உம்மி’ என்று பதறிக் கொண்டு ஓடினார் அன்ஷிதா. தன் அம்மாவோ என்று நினைத்து ஏமாந்த ஜாக்குலினுக்கு கண் கலங்கியது. “சூப்பரா விளையாடற. கோபத்தையும் பாசத்தையும் கம்மி பண்ணு” என்று மலையாள வாசனையுடன் கூடிய தமிழில் சரியாக அட்வைஸ் சொன்னார் அண்ணன். தன் குடும்பத்தினரை பிக் பாஸ் வீட்டிற்கு வரவழைத்து பார்ப்பதென்பது அன்ஷிதாவின் பெரிய கனவாம். அது இன்று நிறைவேறியதில் அம்மணிக்கு மகிழ்ச்சி. 

BBTAMIL 8: DAY 80

அன்ஷிதாவின் அம்மாவிற்கு அருணைத்தான் ரொம்ப பிடிக்குமாம். டல்லாக இருந்த அருணின் முகத்தில் இப்போதுதான் மலர்ச்சி தென்பட்டது. அண்ணாவிற்கு தீபக்கையும் சவுந்தர்யாவையும் பிடிக்குமாம். ‘சவுந்தர்யா ராக்கெட் மாதிரி. சர்ருன்னு மேலே போவும். ஆனா எங்க விழும்ன்னு தெரியாது” என்று தம்பி சொன்ன கமெண்ட்டிற்கு வீடு அதிர சிரித்தார்கள். ‘ரிசர்வ்ட் டைப்’ என்று அறியப்பட்ட அண்ணா, ஒவ்வொருத்தரைப் பற்றிய கமெண்ட்டையும் ரகளையாக சொல்ல எல்லோரும் ரசித்தார்கள். ‘மஞ்சரியும் முத்துவும் பேசும் தமிழ் புரியவில்லை’ என்று சொல்லப்பட்டது கலாசார காமெடி. 

முரண்பாடு தலைப்பின் போது “அன்ஷிதா பாசத்தைக் காட்டி ஏமாத்தறா” என்பது மாதிரி சொன்ன ஜாக்குலினிடம் “அவ நெஜம்மாவே பாசத்தைக் காண்பிப்பா. கோபம்தான் வந்துடும். ஆனா உடனே மறந்துடுவா” என்று சொன்ன அண்ணா, சாப்பாடு விஷயத்தில் மஞ்சரி சொன்னதையும் நினைவுப்படுத்தினார். 

பிக் பாஸ் எட்டு சீசனையும் சம்மந்தி என்கிற அயிட்டத்தையும் பிரிக்க முடியாது. எனவே அன்ஷிதாவின் அம்மா அனைவருக்கும் சம்மந்தி செய்து தர வேண்டும் என்று டாஸ்க் வர அதை சந்தோஷத்துடன் ஏற்று அனைவருக்கும் குலாமி மேம் ஊட்டி விட்டது சிறப்பான காட்சி. ‘அவசியமான நேரத்தில் கூட நிற்காததற்காக மன்னிப்பு கேட்டு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார் அன்ஷிதா. ‘தங்கச்சிதானே. என்ன இப்போ?” என்று அரவணைத்துக் கொண்டார் அண்ணன்.

BBTAMIL 8: DAY 80

ஜாக்கின் குடும்பம் வராததால் ஃபீல் செய்து கொண்டிருந்த அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக விசே அனுப்பியிருந்த பர்கர் விருந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. 

அருண், ஜாக்குலின், முத்து, ஜெப்ரி ஆகியோரின் குடும்பமும் உள்ளே வரும் போது மேலும் பல சுவாரசியமான காட்சிகள் கிடைக்கக்கூடும். அருணின் அப்பா, முத்துவின் மீது கடுமையான குற்றச்சாட்டை வைக்கும் காட்சியோடு இன்றைய முதல் பிரமோ வெளியாகியிருக்கிறது. என்ன நடந்தது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

BB Tamil 8: `மூணு வாரம் நல்லா விளையாடிட்டு டைட்டில் வின்னரா நீ வா...' - ஜாக்குலினை தேற்றிய அம்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

BB Tamil 8: 'Jeffry இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்...' - நெகிழும் ஜெஃப்ரியின் தந்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் சில வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு... மேலும் பார்க்க

BB Tamil 8: ``நம்ம பரம்பரைக்கே பெருமை சாமி" - கட்டி அணைத்து நெகிழ்ந்த முத்துகுமரனின் அம்மா, அப்பா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்த... மேலும் பார்க்க

BB Tamil 8 : ' என் பையனை அப்படி சொன்னது..!' - முத்துகுமரனை சாடிய அருணின் தந்தை

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 81-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருக... மேலும் பார்க்க

BB Tamil 8 : `மஞ்சரி அவரைதான் பட்டுனு சொன்னாங்க..!' - மஞ்சரி ஃபேமிலி எக்ஸ்க்ளூசிவ்

பிக் பாஸ் வீட்டில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த டாஸ்க்கில் அனைத்துப் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சந்திப்பதோடு மற்ற போட்டியாளர்களுடனான கருத்து முரண்களை தெரிவிக்கிறா... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: "அதுதான் அன்ஷித்தா..." - சம்மந்தியை அனைவருக்கும் ஊட்டிய அன்ஷித்தாவின் தாய்!

பிக் பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கிவிட்டது.போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் வந்து மற்ற போட்டியாளர்களுடனான கருத்து முரண்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தின... மேலும் பார்க்க