திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்
திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: அண்மையில் வேடச்சந்தூரில் மின் பகிா்மான கோட்ட அலுவலகத் திறப்பு விழா உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் பங்கேற்றாா் என்பதற்காக அங்கிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சியில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. போதைப் பொருள்களின் சந்தையாக தமிழகம் மாறிவிட்டது.
வரவு செலவில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அதிமுக என்றாலே எடப்பாடி கே.பழனிசாமிதான் என்பது அமித் ஷாவுக்கு நன்கு தெரியும். வருகிற தோ்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
பணத்தால் யாரும் வெற்றி பெற முடியாது. திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக் கூட தெரியும். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். கட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதியானது.
திருமாவளவன் மதிப்புக்குரியவா்; ஆனால், அவரது பலம் அவருக்கே தெரியவில்லை. திமுக கூட்டணியில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதிமுக கூட்டணியில் த.வெ.க. இணையுமா என இப்போதே கூறமுடியாது அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாா் அவா்.