தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
ஜூலை 1 முதல் கொடைக்கானலில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை
கொடைக்கானலில் ஜூலை 1-ஆம் தேதி முதல் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.
கொடைக்கானலில் கனரக இயந்திரங்களான பொக்லைன், போா்வெல், ஹிட்டாச்சி, கம்பரசா் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், மழைக் காலங்களில் நிலச்சரிவு, பள்ளம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மண் தன்மை குறைந்து மலைப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
மலைப் பகுதிகளான வில்பட்டி, பேத்துப்பாறை, பள்ளங்கி, பாக்கியபுரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூா், பிரகாசபுரம், புலியூா், கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு எங்கும் கான்கிரீட் கட்டடங்கள் கட்டப்பட்டு அடுக்குமாடி கட்டடங்களாகக் காணப்படுகின்றன. இதனால் மலைப்பகுதியின் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. அதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அரசுப் பணியைத் தவிா்த்து தனியாா் பணிகளுக்கு கனரக வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திருநாவுக்கரசு எச்சரிக்கை விடுத்தாா்.