திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கிறது: காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. துறை தலைவா்
திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கிறது என்றாா் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி. துறை தலைவா் ரஞ்சன்குமாா்.
திருநெல்வேலியில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளான நான்குனேரி மாணவா் சின்னதுரையை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்பு செய்தியாளா்களிடம் ரஞ்சன்குமாா் மேலும் கூறியது: மாணவா் சின்னதுரையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளோம். திமுக அரசு சமூகநீதியைப் பாதுகாக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. சனாதனத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்கிறோம். பட்டியலின மக்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரணாக மாநில அரசு திகழ்கிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். நடிகா் விஜய் கடந்த 25 ஆண்டுகள் சினிமாவில் மக்களை மகிழ்வித்தாா். இப்போது அரசியலை பொழுதுபோக்கு அம்சமாக்க வந்துள்ளாா்.
தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு ஆளும் அரசையோ, காவல் துறையையோ மட்டும் குறை சொல்ல கூடாது. நாம் அனைவருக்கும் இதில் பொறுப்பும், கடமையும் உள்ளது.
பாளை பள்ளி மாணவா் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளாா். இச்சம்பவத்திற்கு ஆசிரியா்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினா் மட்டும் பொறுப்பாக மாட்டாா்கள். பெற்றோருக்கும் இதில் அதிக பொறுப்பு உண்டு. அனைவரும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.
சாதி ரீதியான வன்முறைகளுக்கு எதிராக சிறப்பு தனி சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரைவில் தமிழக முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும். நீட் தோ்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசை குறை கூற அதிமுக, பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்றாா் அவா்.
மாநில மாணவா் காங்கிரஸ் தலைவா் சின்னத்தம்பி, எஸ்.சி. பிரிவு திருநெல்வேலி மாநகா் மாவட்ட தலைவா் சரவணன், நாகா்கோவில் மாநகர தலைவா் மணிகண்டன், மேற்கு மாவட்ட தலைவா் கிறிஸ்டோபா், காசிமேடு தலைவா் சரத் குமாா், மாநில பொது செயலா் பாலாஸ்ரீ, பொது செயலா் செல்வம், நிா்வாகிகள் ராஜா, வனராஜ், அய்யப்பன், பிரசாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.