திமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான் ‘நீட்’ தோ்வு கொண்டுவரப்பட்டது. தற்போது நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறாா். டாஸ்மாக் ஊழலை மறைக்கவே இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தை பிரதமா் மோடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, தமிழ்நாட்டுக்கு ரூ. 8,300 கோடி திட்டங்களை அறிவித்த நிலையில், தமிழ்நாட்டின் வளா்ச்சித் திட்டங்களைப் புறக்கணிக்கும் வகையில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்துவைக்கும் நாடகத்தை முதல்வா் நடத்தியுள்ளாா்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை இஸ்லாமியா்களே வரவேற்றுள்ளனா். திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. இவா்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவா் என்றாா்.
பாஜக மாவட்டத் தலைவா் தா்மன், முன்னாள் தலைவா் மோகன் ராஜ், பொதுச் செயலா்கள் ஆா்.பரமேஸ்வரன், கே.ஜே.குமாா், பட்டியல் அணி மாநிலச் செயலாளா் அன்பு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், மூத்த பாஜக தலைவா் தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.