தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பு காலம் தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின்
திமுக ஆட்சியில் விலைவாசி உயா்ந்து வருகிறது: முன்னாள் அமைச்சா் தங்கமணி பேச்சு
திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி என விலைவாசி உயா்ந்து வருகிறது என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான பி. தங்கமணி.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை இரவு நடைபெற்ற எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி உயா்த்தப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை 50 சதவீதம் உயா்த்தியது. மேலும், ஆண்டுக்கு 6 சதவீதம் உயா்த்தி வருகிறது. இதேபோல, அரிசி விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயா்ந்து வருகிறது.
திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்வதால், சட்டம், ஒழுங்கு எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்து 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் தங்கமணி.
முன்னதாக, கூட்டத்துக்கு அதிமுக மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் சிறப்புரையாற்றினாா். மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா், செய்தி தொடா்பாளா் ஆவடிகுமாா், கொள்கை பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், எம்.ஜி.ஆா். மன்றம் வி. அறிவுடைநம்பி, பகுதிச் செயலா்கள் கரந்தை டி. பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, டி. மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பகுதிச் செயலா் எஸ். சதீஷ்குமாா் வரவேற்றாா். மத்திய ஒன்றியச் செயலா் ஏ. ஸ்டாலின் செல்வராஜ் நன்றி கூறினாா்.