திமுக ஆட்சி இருண்ட காலத்தைவிட மோசம்: அண்ணாமலை
தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தைவிட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை கொலைச் சம்பவம் தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உள்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க: அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே.
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.
தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தைவிட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.