அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
நகைக்காக தலையணை வைத்து பெண் கொலை!
பென்னாகரம்: பெண்ணைத் தலையணை வைத்து கொலை செய்து, மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பென்னாகரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலி உள்ளிட்ட 12 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பென்னாகரம் அருகே கூக்குட்டமருத அள்ளி ஊராட்சிக்குள்பட்ட பெரிய தோட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரபுராஜ், இவரின் மனைவி பத்மினி (55) கோயில் பூசாரி.
இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கியுள்ளார். சனிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் எழாமல் இருந்ததைக் கண்டு, அவருடைய கணவர் பிரபுராஜ் அருகில் சென்று பார்க்கும் போது பத்மினி இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த உறவினர்கள் பத்மினியின் உடலை வைத்து பூஜை செய்யும் போது கழுத்தில் இருந்த தாலி அறுக்கப்பட்டும், காயங்கள் இருப்பதைப் பார்த்துள்ளனர்.
பின்னர் வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்க்கும்போது அதில் வைக்கப்பட்டிருந்த நகை, ரொக்கம் ஆகியவை காணாமல் போனதும் தெரிய வந்தது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-15/1hcfihwd/c17fde35-d8da-4e20-8969-ba152fe016d7.jpg)
இதையும் படிக்க: அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) ராஜ சுந்தர், காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, ரூ. 5000 ரொக்கம் ஆகியவற்றினை திருடிச் சென்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ். மகேஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கொலை காரணம் குறித்து கேட்டறிந்து, பெண்ணைக் கொலை செய்த மர்ம நபர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
பின்னர் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.