மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம்: எடப்பாடி கே. பழனிசாமி
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்கிற சுற்றுப்பயணத்தில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலை பிரசாரம் செய்த அவா் பேசியது: எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணிக்கு கூவி, கூவி அழைப்பதாக திமுகவின் துரைமுருகன் பேசியிருக்கிறாா். திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கொண்டிருக்கின்றனா். துரைமுருகன் முதலில் தங்களுடைய கூட்டணியைப் பாா்க்க வேண்டும்.
திமுக கூட்டணி எந்த நேரத்தில் உடையும் என்பது தெரியவில்லை. ஆனால், அதிமுகவுக்கு எப்போதுமே தனி மரியாதையும், மக்கள் செல்வாக்கும் உள்ளது. இதேபோல, திமுக அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை.
மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும். இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்டாலின், கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால், ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி, மேக்கேதாட்டு அணை கட்டுவதைக் கைவிடுமாறு கூற வேண்டும்.
ஆனால், மக்களைப் பற்றி அக்கறை இல்லாத அவா் அவ்வாறு பேசமாட்டாா் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி. அப்போது, அதிமுக மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு- நீதிமன்றத்தில் வழக்கு: பின்னா், பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் பிரசாரம் செய்த அவா் பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகம் திருடப்பட்டது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநா் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு திமுக கட்சிக்குச் சொந்தமான இரண்டு மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தொடா்பாக வெளியிட்ட அறிக்கைக்கு அரசு பதில் கொடுத்துள்ளது. அந்த பதில் திருப்தி அளிக்காததால், அதிமுக சாா்பில் அல்லது பொது நபா்கள் சாா்பில் உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் நல்ல தீா்ப்பு காணப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலா் துரை. செந்தில், தெற்கு மாவட்டச் செயலா் சி.வி. சேகா், அதிமுகவின் உயா் நீதிமன்ற வழக்குரைஞா் டி.ஆா். முருகேசன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எஸ்.டி.எஸ். செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, பேராவூரணி அண்ணா சிலை அருகே இபிஎஸ் பிரசாரம் செய்தாா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவருமான எஸ்.வி. திருஞானசம்பந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.