பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி
திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அவர் பேசுகையில்,
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் `சாரி’ கேட்டது தப்பில்லை. ஆனால், உங்கள் ஆட்சியில் போலீஸ் விசாரணையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த 24 பேரின் குடும்பத்தினரிடமும் நீங்கள் சாரி சொன்னீர்களா? அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணம்போல, இந்த 24 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்தீர்களா?
சாத்தான்குளம் ஜெபராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது, காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். ஆனால், நீங்களும் அதைத்தான் செய்துள்ளீர்கள். அதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாகத்தான் சிபிஐ இருக்கு.
நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக கோரியதால்தான், நீங்கள் ஒன்றியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டீர்கள்.
அண்ணா பல்கலை. விவகாரம் முதல் அஜித்குமார் கொலை வழக்கு வரையில் நீதிமன்றம் தலையிட்டு, உங்கள் அரசை கேள்விக் கேட்கிறது. நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டுமென்றால், நீங்கள் எதற்கு? உங்கள் ஆட்சி எதற்கு? உங்களின் முதல்வர் பதவி எதற்கு? எந்தக் கேள்விக்கும் உங்களிடம் பதில் இல்லை. இருந்தால்தானே பதில் வரும்.
`சாரி மா’ என்ற பதில் மட்டும்தான் உங்களிடம் இருந்து வரும். தெரியாம நடந்துருச்சு மா, நடக்கக் கூடாதது நடந்துருச்சு மா - அவ்வளவுதான்.
வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், தற்போது `சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது. நீங்கள் ஆட்சியைவிட்டு செல்லும் முன், பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரிசெய்ய வேண்டும்; இல்லையெனில், சரிசெய்ய வைப்ப்போம். அதற்கான அத்தனை மற்றும் அனைத்து போராட்டங்களும் தவெக சார்பில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?