மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
”திமுக-வின் தோல்வி தெற்கிலிருந்துதான் ஆரம்பிக்கப் போகிறது” - தமிழிசை செளந்தரராஜன் என்ன சொல்கிறார்?
பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தெற்கு தேய்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் யாரும் தென்பகுதியை முன்னேற்றவில்லை. ஆனால், இன்று பார்த்தால் விமான நிலையமாக இருந்தாலும் சரி, துறைமுகமாக இருந்தாலும் சரி பிரதமர் மோடி மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
நான் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தலில் நின்றபோது தூத்துக்குடி விரிவடையும் எல்லா வசதிகளும் வரும் என்று சொன்னேன். அப்போது என்னை எல்லோரும் கிண்டல் செய்தனர். ஆனால், இன்று அதே வளர்ச்சி வந்து கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தி
இது பாரத பிரதமரின் முழுமையான முயற்சியும் தொலைநோக்கு பார்வையும். தூத்துக்குடியில் ஒரு கார் நிறுவனத்தைத் திறந்து உள்ளனர். ஆனால் எந்த ஒரு அந்நிய முதலீடு என்றாலும் மத்திய அரசின் துணை தேவை இவை அனைத்திற்கும் மத்திய அரசுதான் காரணம். அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி பொய் சொன்னதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஏதோ தியாகியைப் போன்று முன்னிறுத்துகின்றனர். வாக்காளர் பட்டியலைச் சமர்ப்பித்த பின்னர் பத்து நாட்களாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திடீர் திடீரென்று இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் பார்த்துக் கொள்வார்கள் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளும்.
கிட்னி திருட்டு
தமிழகம் முழுவதும் தி.மு.க-வின் தோல்வி ஆரம்பிக்கப் போகிறது. அது தெற்கு திசையில் இருந்து ஆரம்பிக்கிறது என்று நான் தைரியமாகச் சொல்வேன். எல்லா திசைகளிலும் தோல்வி ஏற்படும். முதல்வர் ஸ்டாலின், தன்னை பிரதமரோடு ஒப்பிடுகிறார். கிட்னி திருட்டு நடைபெறுகிறது.
இதைத் திருட்டு என்று சொல்லக்கூடாது முறைகேடு என்று சொல்லிக் கொள்ளலாம் என்கின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் மருத்துவமனை அதில் ஈடுபட்டுள்ளது.

நெல்லையில் ஆணவக்கொலை
இவை அனைத்தும் தீர விசாரிக்கப்பட வேண்டும். வெறும் உரிமம் மட்டும் ரத்து செய்தால் போதாது. இதற்கு முதல்வர் விளக்கம் சொல்ல வேண்டும். திருமாவளவன் உள்ளிட்ட எல்லோரும் கடந்த ஆட்சியில் ஆணவக் கொலை நடந்த போது ’அரசாங்கம்’ என்றனர்.
தற்போது நெல்லையில் ஆணவக்கொலை நடந்த போது ’சாதி’ என்கின்றனர். ஸ்டாலினின் ஆட்சியில் கூட்டணிக்காக எது நடந்தாலும் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும். இ.பி.எஸ் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
எங்கள் தலைவர் 17-ம் தேதியிலிருந்து வாக்குச்சாவடி மாநாடு நடத்துகிறார். தேர்தலுக்குக் கால அவகாசம் இருக்கிறது. இன்னும் எங்களிடத்தில் சேருபவர்கள் எல்லோரும் சேருவார்கள். தமிழக முதல்வர் ஜெர்மனி செல்கிறார்.
இதற்கு முன்பு முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்ன நடந்தது என்று அறிக்கை கொடுத்துவிட்டுச் செல்லட்டும். முதலீடு ஒன்றும் வராது. இதற்கு முன்பு போன வெளிநாடுகளில் எத்தனை முதலீடுகள் வந்தது என்று கணக்கு கொடுக்க வேண்டும்” என்றார்.