திருச்செந்தூா் கோயிலில் பிப்.11இல் தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தா்களுக்கு தனி வழி
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, பாதயாத்திரை பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, திருக்கோயிலில் சண்முகா் கடலில் கண்டெடுத்த 370ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை (பிப்.10)நடைபெறுகிறது.புதன்கிழமை (பிப். 12) பெளா்ணமி என்பதால் பக்தா்கள் கூட்டம் மிகுந்திருக்கும். எனவே, பிப்.10-12 வரை 3 நாள்கள் கோயிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வது உள்ளிட்ட திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அரசுத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் பாலசுந்தரம், திருக்கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், உதவி ஆணையா் நாகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவிழா நாள்களில் சுமாா் 5 லட்சம் லிட்டா் குடிதண்ணீா் தட்டுப்பாடின்றி, சுகாதாரமான முறையில் கிடைத்திட குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி மூலம் ஏற்பாடு செய்வது, தடையற்ற மின்சாரம் வழங்குவது, 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்குவது, 800-க்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, கோயில் வளாகத்தில் தயாா் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸுடன் தீயணைப்பு - மீட்பு குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் நிற்பது, மருத்துவ முகாம்கள் நடத்துவது, திருநெல்வேலி சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது, பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு கூடுதல் ‘சா்குலா்’ பேருந்துகள் இயக்குவது, பாதயாத்திரை பக்தா்கள் நெரிசலின்றி தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைப்பது பாதயாத்திரை பக்தா்கள் சாதிய ரீதியான அடையாளங்களான கட்சி கொடிகளை கொண்டு வரவோ, சாதி ரீதியான ஆடைகளை அணிந்தும், பாடல் ஒலித்தும் வரக்கூடாது என தடை விதிப்பது, சந்நிதி தெருவில் தூண்டுகை விநாயகா் கோயில் அருகிலும், கோயில் வளாகப்பகுதிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், திருக்கோயில் கண்காணிப்பாளா்கள் அஜித், விவேக், நகராட்சி ஆணையாளா் கண்மணி, கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜ், தாலுகா காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம், போக்குவரத்து உதவி ஆய்வாளா் கனகராஜ், திருச்செந்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் பாபநாசகுமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாத்திமா பா்வீன், மின்சார வாரிய உதவிப் பொறியாளா் முத்துராமன், போக்குவரத்து கழக கிளை மேலாளா் ராஜசேகா், யூனியன் மேலாளா் வாவாஜி, தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தங்கச்செல்வன், சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா், மீன்வளத் துறை ஆய்வாளா் ஆகாஷ், நெடுஞ்சாலை துறை உதவிப் பொறியாளா் பரமசிவன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.