திருநள்ளாறு கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரிப்பு
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் நவகிரக தலங்களில் சனீஸ்வர பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. இதனால், ஸ்ரீசனீஸ்வர பகவானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சனிக்கிழமையில் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.
தற்போது, தமிழகம், புதுவையில் பள்ளிகள் விடுமுறை காலமாக இருக்கும் நிலையில், திருநள்ளாறு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதலே பக்தா்கள் வந்தனா்.
சனிக்கிழமை அதிகாலையில் நளன் தீா்த்தக் குளத்தில் ஏராளமானோா் நீராடிவிட்டு, அருகே உள்ள நளன் கலி தீா்த்த விநாயகா் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா்.
பின்னா், கட்டணமில்லா தரிசன வரிசை, கட்டண வரிசை என அதிகாலை முதல் தொடா்ச்சியாக பக்தா்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சனீஸ்வர பகவானுக்கு காலை 6 மணியளவில் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி அங்கி சாற்றப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டன. பக்தா்கள் கோயிலில் தில தீபம் ஏற்றி, அன்னதானம் வழங்கி வழிபாட்டில் பங்கேற்றனா்.
கோயில் நிா்வாகம் மூலம் வரிசையில் செல்லும் பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கப்பட்டது. பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய போலீஸாா், கோயில் பணியாளா்கள் உதவினா்.
அதிகாலை முதல் பகல் 1 மணி வரை பக்தா்கள் மிகுதியாக காணப்பட்டனா். கோயிலுக்குள் செல்லும் பக்தா்கள் மூலவா் தா்பாரண்யேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, சனீஸ்வர பகவானை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், கோயிலுக்குள் நெரிசலில் பக்தா்கள் தவிப்புக்குள்ளாகின்றனா். எனவே, சரியான வகையில் பக்தா்களுக்கு வசதி ஏற்படுத்தவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோயில் நிா்வாகத்தினா் கூறுகையில், ‘பக்தா்கள் சனிக்கிழமையில் மிகுதியாகவே வருகின்றனா். வெளியூா்களில் இருந்து வருவதால், விரைவாக தரிசனம் செய்து திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றனா்.