`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
திருப்பத்தூர்: கட்டி முடித்தும் திறக்கப்படாத நியாய விலைகடை - பொது மக்கள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே அமைந்திருக்கிறது சொரக்காயல்நத்தம் பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்துக்குட்பட்ட வெள்ளநாயக்கனேரி அருகே பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலைகடை இயங்கி வந்தது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.66 லட்சம் செலவில் வெள்ளநாயக்கனேரி ஏரி அருகே புதிய நியாய விலைகடை கட்டப்பட்டது.
ஆனால், கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும்... புதிய கடை இதுவரை திறக்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, ``நியாய விலைகடையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலை ஏற்படும். ஏற்கெனவே இந்தக் கடையின் நிழலில் கால்நடைகள் அதிக அளவில் தஞ்சமடைகின்றன. இது மட்டுமல்லாமல் ஒரு சில முறை பார்க்கும்போது மது பாட்டில்கள் இங்கு விழுந்து கொண்டிருக்கும். இந்த நிலை இப்படியே தொடரக் கூடாது. விரைவில் இந்தக் கடையில் பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும்" என்றனர்.
இந்த விவகாரம் குறித்து நாட்றம்பள்ளி ஊர் பஞ்சாயத்துத் தலைவர் பூபாலனிடம் விளக்கம் கேட்டபோது, ``நாங்களும் இதைத் திறக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஒரு சில பணிகளால் தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. எலக்ட்ரிக் பணிகள் மட்டும்தான் பாக்கி. முடிந்த உடனே திறந்து விடுவோம்" என்றார்.
மாவட்ட நிர்வாகம் கடையைத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது.