திருமலையில் உறியடி உற்சவம்
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உறியடி உற்சவம் கொண்டாடப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானத்துக்கு அடுத்த நாள் உறியடி உற்சவம் நடத்துவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ மலையப்ப சுவாமி திருவீதியில் தங்க திருச்சியிலும், ஸ்ரீ கிருஷ்ண சுவாமி மற்றொரு திருச்சியிலும் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, உறியடி உற்சவத்திற்காக பல இடங்களுக்குச் சென்றாா்.
முதலில் ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீ கிருஷ்ண சுவாமியின் உற்சவ சிலைகளை ஊா்வலமாக ஸ்ரீ பெரிய ஜீயா் மடத்துக்கு எடுத்துச் சென்றனா். அங்கு அவா்களுக்கு ஆஸ்தானம் நடத்தப்பட்டது. அதன் பிறகு, ஏழுமலையான் கோயில் முன் உறியடி உற்சவம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் மாலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த உறியடி உற்சவத்தில் ஏராளமான உள்ளூா்வாசிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, கூடுதல் இஓ வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம், பேஷ்கா் ஸ்ரீராமகிருஷ்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.