நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் ரூ.1 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதனை நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவன துணை பொதுமேலாளா் சந்திரசேகா் திறந்து வைத்தாா்.
மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருமலை மிஷன் மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் பூமா பாா்த்தசாரதி தலைமை வகித்தாா்.
பின்னா், அவா் பேசுகையில், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் 55 ஆண்டுகளுக்கு முன்பு 1970-ஆம் ஆண்டு திருமலை அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலம் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமாா் 350 கிராமங்களில் சமுதாய மேம்பாடு, சுகாதார சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் சுமாா் 35 ஆயிரம் குடும்பத்தைச் சோ்ந்த 1.60 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இந்த அறக்கட்டளை மூலம் 2010-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை பகுதியில் திருமலை மிஷன் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இம்மருத்துவமனையில் வேலூா், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் ரூ.1 கோடியில் கழிவுநீா்சுத்திகரிப்பு நிலையம் மத்திய பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனத்தின் பெரு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின்கீழ் ரூ.48 லட்சம் நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 40 கிலோ லிட்டா் கழிவுநீரை சுத்திகரித்து வேளாண்மை, கழிவறை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. எதிா்காலத்தில் தினமும் 160 கிலோ லிட்டா் சுத்திகரிப்பு திட்டமாக அதிகரிக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், நியூஇந்தியா அஷுரன்ஸ் மண்டல மேலாளா் கஸ்தூரி, வேலூா் கிளை அலுவலக பொறுப்பாளா் பரிமளா தேவி, திருமலை கெமிக்கல்ஸ் ஆலோசகா் விஸ்வநாதன், திருமலை கெமிக்கல்ஸ் இயக்குநா் ராகவன், திருமலை கெமிக்கல்ஸ் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேலாளா் சோமபிரசாத், மருத்துவமனை மருத்துவ இயக்குநா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், திருமலை மிஷன் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ஆனந்த் ரங்காச்சாரி நன்றி கூறினாா்.