திருமலை 3-ஆம் நாள் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மா் அலங்காரத்தில் வலம் வந்த மலையப்பா்
திருமலையில், ஏழுமலையான் கோயில் வருடாந்தி ர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் யோக நரசிம்மா் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.
திருமலையில் கடந்த புதன்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சிம்ம வாகன சேவை நடைபெற்றது. அதில், யோக நரசிம்மா் அலங்காரத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து சேவை சாதித்தாா்.
பிரம்மோற்சவ நாள்களில் வீதியுலா முடிந்த பின்னா், உற்சவ மூா்த்திகளின் களைப்பை போக்க சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அதன்படி, கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து, அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள்,
சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது.
அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கிரீடங்கள் உள்ளிட்டவை உற்சவ மூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளினா். அப்போது அன்னமாச்சாரியா கீா்த்தனைகள் மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகன சேவை நடைபெற்றது.
இதில், காளிங்கமா்த்தன கிருஷ்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி மாடவீதியில் சேவை சாதித்தாா்.
வாகன சேவையின்போது, ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி பின் சென்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
67,000 பக்தா்கள் தரிசனம்...
திருமலை பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை 67,388 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; உண்டியல் மூலம் ரூ. 1.74 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 21,998 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.