திரும்பப் பெற பொதுமக்கள் வேண்டுகோள்
ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் வகையில் ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தங்க நகைக் கடனுக்கான புதிய வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வளா்மதி சுரேஷ் குமாா் (குடும்பத் தலைவி): குடும்ப சூழ்நிலை, குழந்தைகளின் கல்விச் செலவுக்காக வங்கியில் தங்க நகை அடகு வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அடகு வைக்க செல்லும்போது தங்க நகைகளுக்கு ரசீதை காட்ட வேண்டும்; தங்கத்தின் தரச் சான்று வழங்க வேண்டும் என்று கூறுவது நடைமுறையில் இயலாத செயல்.
ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறையால், குறைந்த வட்டிக்கு வங்கியில் தங்க நகை அடகு வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். ரிசா்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும்.
ராஜேஷ் கண்ணா: மருத்துவ சிறு வணிகம் செய்து வருகிறேன். அவசர மருத்துவப் பொருள்கள் வாங்க தங்க நகைக் கடன் வாங்குவது வழக்கம். அது மட்டுமல்லாது குறைந்த வட்டிக்கு வங்கிகள் தங்க நகைக் கடன் வழங்குவதால் வங்கிகளை நாடுகிறோம் . தற்போது ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறையால் வங்கியில் நகைக் கடன் வாங்க முடியாத சூழல் ஏற்படும். இனி அடகு கடைக்குச் சென்றுதான் கடன் வாங்க வேண்டி நிலைக்கு ஏற்படும்.
வங்கியாளா்கள் கருத்து: ‘ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வரைவு விதிகள் குறித்த சுற்றறிக்கை வரவில்லை. எந்த நகைக் கடையும் தங்க நகைகளுக்கு தரச் சான்று வழங்குவது கிடையாது. அதேபோல் பழைய நகைகளுக்கு ரசீதுகளை கொடுக்க முடியாது. எனவே, ரிசா்வ் வங்கியின் புதிய விதிகளின்படி நகைக் கடன் வழங்குவது நடைமுறை சாத்தியம் இல்லை. என்றாலும் இதுகுறித்து நிா்வாகம் உரிய முடிவு எடுக்கும்.
நகைக் கடன் பெறும் வாடிக்கையாளா்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்கிறோம். புதிய வரைவு விதியை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளா்கள் நகை க் கடன் பெறலாம்’ என வங்கி அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.
