விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்
திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவில் புதைந்த வீடுகளுக்குள் 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் தரைமட்டமானது.
இதில், ராஜ்குமார், அவரது மனைவி, 5 சிறுவர்கள் என 7 பேர் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்தனர்.
இதையும் படிக்க : கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!
தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு விடியவிடிய 15 மணிநேரமாக 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு திங்கள்கிழமை காலை நேரில் சென்று மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தை ஆய்வு செய்தார்.
இதனிடையே, ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகாமையில் திங்கள்கிழமை காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அப்பகுதி மக்கள் மண்சரிவால் அச்சமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.