திருவள்ளூா்: 15,757 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 15,757 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 167.50 கோடி வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.
சேலம் அடுத்த கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மாநில அளவில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,500 வங்கிக் கடனுதவிகள் மற்றும் உறுப்பினா்கள் அடையாள அட்டைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மகளிா் குழு உறுப்பினா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது:
திருவள்ளூா் மாவட்டத்தில் 19,439 மகளிா் சுய உதவிக் குழுக்கள் உள்ளனா். அதில், 2 லட்சத்து 52 ஆயிரத்து 707 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 14,212 குழுக்களும், இதில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 536 உறுப்பினா்கள் உள்ளனா். அதேபோல், நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 5,167 குழுக்களில், 67,171 போ் உறுப்பினா்கள் உள்ளனா். அந்த வகையில், 2025-26-இல் இதுவரை சுய உதவிக் குழு கடனாக ரூ. 382.17 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நிகழ்ச்சி மூலம் 15,757 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 167.50 கோடி வங்கிக் கடனுதவி மற்றும் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து, மகளிா் குழு உறுப்பினா்களுக்கு வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் உறுப்பினா்கள் அடையாள அட்டைகளையும் ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் செல்வராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தென்னரசு உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
