திருவாரூர்: இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் பயணிகள்; அலட்சியம் வேண்டாமே அரசே!
திருவாரூர் மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மு.கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் (2012-13) கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையினை பூதமங்கலம், மணல்மேடு, கீழ்பாதி போன்ற கிராம மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
மன்னார்குடி-திருவாரூர் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்தப் பயணிகள் நிழற்குடை தற்போது விரிசல் விழுந்தும், மண்ணரிப்பினால் ஒரு பக்கமாக சாய்ந்தும் காணப்படுகிறது. இதன் ஆபத்தை உணராமல் பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மாணவி ஒருவர், ``நான் திருவாரூர் காலேஜ்'ல படிக்கிறேன். ரொம்ப நாளா இந்த பஸ் ஸ்டாப் இப்படித்தான் இருக்கு, சுத்தி உள்ள கிராம மக்கள் திருவாரூர் போக இந்த பஸ் ஸ்டாப்பைத்தான் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஆரம்பத்துல சின்ன கிராக்கா இருந்த சுவர், அப்படியே விரிசல் அதிகமாகிடுச்சு. இந்த பஸ் ஸ்டாப் இருந்தும் எந்தப் பயனும் இல்லைன்னு தான் சொல்லணும். பெரும்பாலான மக்கள் இந்த பஸ் ஸ்டாப்புக்கு எதிரே இருக்குற அரச மரத்து நிழலுல தான் நிக்குறாங்க. சில பேர் ஆபத்தை உணராம இங்க பஸ் ஸ்டாப் உள்ள நிக்குறாங்க. இது எப்ப வேணாலும் இடிஞ்சு விழுற நிலைமைல தான் இருக்கு. அதனால, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இந்த பஸ் ஸ்டாப்பை இடிச்சிட்டு, புதுசா கட்டிக்கொடுத்தா நல்லா இருக்கும்" என்றார்.
இது குறித்து அதிமுக நகரச் செயலாளர் ராஜசேகரிடம் கேட்டோம். "பூதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பல மாதங்களாக இதே நிலை நீடிக்கிறது. பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி, இன்னும் பிற அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களும் இப்பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நானே நேரடியாக கூத்தாநல்லூர் நகர் மன்ற உறுப்பினர் அவர்களிடம் இரண்டு முறை இப்பிரச்னை குறித்து கூறியுள்ளேன். அவர்கள் இதனை இடித்துவிட்டு புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்படும் என்று கூறினார்கள். ஆனால் இந்நாள் வரையிலும் இது தொடர்கதையாகி வருகிறது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு, நகராட்சி நிர்வாகம் நல்லதொரு முடிவை கூடிய விரைவில் எடுக்க வேண்டும். இல்லையெனில் நகர அதிமுக-வின் சார்பில் அப்பேருந்து நிறுத்தம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தை அறிவிக்க நேரிடும்" என்று கூறினார்.
இது குறித்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருத்திகாஜோதியிடம் விசாரித்தோம். ``நான் பொறுப்பேற்று ஒரு மாத காலம்தான் ஆகிறது. இந்தப் பேருந்துநிறுத்தம் தொடர்பாக எங்களது நகராட்சி பொறியியல் அலுவலர் (ME) ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த பேருந்து நிறுத்தம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ளது என்பதால், இப்போதைய சட்டமன்ற உறுப்பினரிடம் நிதி கேட்பு கோரப்பட்டிருக்கிறது. அந்நிதி வரும் பட்சத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று கூறினார்.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு அப்பேருந்து நிறுத்தத்தினை இடித்து புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்பதே பயணிகளின் ஒரே கூறிய கோரிக்கையாக உள்ளது.