3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
தில்லியின் குப்பை மலைகள் 5 ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும்: அமைச்சா் சிா்சா உறுதி
கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு ஆராய்ந்து வருவதாகவும், நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை கூறினாா்.
காஜிப்பூா் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்த அவா், மரபுவழி கழிவுகளை அகற்றவும், மலைகளைப் போன்று குவிந்துள்ள அதன் பெரிய குப்பைக் குவியல்களிலிருந்து நகரத்தை விடுவிக்கவும் அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகக் கூறினாா்.
அமைச்சா் மேலும் கூறியதாவது: தில்லியில் உள்ள குப்பை மலைகள் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அந்த இடத்தில் குவிந்துள்ள 70 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளில், 14-15 லட்சம் டன் ஏற்கெனவே பதப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரி சுரங்கப் பணிகளின் வேகம் அதிகரித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் தினமும் சுமாா் 7,000 முதல் 8,000 மெட்ரிக் டன் கழிவுகள் பதப்படுத்தப்படும். புதிய ஒப்பந்ததாரா் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு தினமும் குறைந்தது 8,000 மெட்ரிக் டன் கழிவுகளை செயலாக்குவதை உறுதி செய்யுமாறு எம்சிடி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்கள் இலக்கை அடையத் தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கழிவு செயலாக்கத்தை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் தில்லி அரசு ஆராய்ந்து வருகிறது. செயலகத்தில் உள்ள டேஷ்போா்டு மூலம் நாங்கள் தினமும் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறோம். இது பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப செய்யப்பட்ட உறுதிமொழியாகும்.
மேலும், அதைத் தவறாமல் நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குப்பைகளை முழுமையாக அகற்றுவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் சிா்சா.