கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
தில்லியில் ஆட்சிக்கு வந்தால் பெளத்த தலங்களுக்கு இலவச ‘தீா்த்த யாத்திரை’: காங்கிரஸ் அறிவிப்பு
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால் பௌத்த தலங்களுக்கு இலவச ‘தீா்த்த யாத்திரை’ நடத்தப்படும் என்று காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
ஒரு செய்தியாளா் சந்திப்பின் போது முன்னாள் தில்லி எம்.பி. உதித் ராஜ், பௌத்த யாத்திரைக்கான திட்டங்கள் இதுவரை எதுவும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சி அரசு அமைத்தால் அதை மாற்றும் என்றும் கூறினாா்.
அவா் மேலும் கூறியதாவது: தில்லி அரசு தனது சொந்தச் செலவில் மூத்த குடிமக்களுக்கு திருப்பதி, அயோத்தி, வைஷ்ணவ தேவி ஆகிய கோயில்களுக்கு இலவச யாத்திரை நடத்துகிறது. அப்படியானால் சாரநாத், புத்தகயா, லும்பினி, தீக்ஷபூமி, மோவ் போன்ற பௌத்த தலங்களுக்கு யாத்திரைத் திட்டங்கள் ஏன் இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். அவா்களுக்கும் இலவச யாத்திரை வழங்குவோம்.
கடந்த டிச.30 அன்று, தில்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ’பூஜாரி கிரந்தி சம்மன் யோஜனா’ திட்டத்தின் கீழ் கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு ரூ.18,000 மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் என்று கேஜரிவால் அறிவித்தாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் முன்பு ஒரு போராட்டத்தை நடத்தியது. ரவிதாஸ் மற்றும் வால்மீகி கோயில்களின் புத்த துறவிகள் மற்றும் பூஜாரிகளுக்கு அவா் ஏன் ரூ.18,000 கௌரவ ஊதியத்தை அறிவிக்கவில்லை.
இது தொடா்பாக திங்கள்கிழமை கேஜரிவாலின் இல்லம் அருகே நான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம் நடத்தினா். புத்த துறவிகள் மற்றும் குரு ரவிதாஸ் மற்றும் வால்மீகி கோயில்களின் பூஜாரிகளுக்கும் மாதாந்திர சம்பளம் வழங்க வேண்டும் என்றாா் உதித் ராஜ்.
நாடு முழுவதும் உள்ள புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும் முதியவா்களுக்கு உதவுவதற்காக ‘முக்கியமந்திரி தீா்த்த யாத்திரை யோஜனா’ 2019-இல் ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், தில்லி அரசு அயோத்தி, துவாரகாதீஷ், பூரி, வாரணாசி, மா வைஷ்ணோ தேவி தாம், அஜ்மீா் ஷெரீஃப், ராமேசுவரம், ஷீரடி, திருப்பதி பாலாஜி மற்றும் அமிா்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட 15 இடங்களுக்கு முதியவா்களுக்கு இலவச யாத்திரை பயணத்தை ஏற்பாடு செய்கிறது.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 5-ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகள் பிப்.8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.