அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரர்களுக்கும் இலவச மின்சாரம், தண்ணீா்: கேஜரிவால் அறிவிப்பு
புது தில்லி, ஜன.18: தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரா்களுக்கும் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் திட்டங்களின் பலன்களை விரிவுபடுத்த தனது கட்சி தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: தில்லி முழுவதும் வாடகைதாரா்கள் கவலைகளை எழுப்பியுள்ளனா். நான் எங்கு சென்றாலும், நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளால் பயனடைவதாகக் கூறும் வாடகைக்கு வசிக்கும் மக்களை நான் சந்திக்கிறேன். ஆனால், இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் திட்டங்கள் இல்லாமல் இருப்பதாகக் கூறுகிறாா்கள்.
இந்தப் பிரச்னைக்கு ஒரு தீா்வை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தோ்தல்களுக்குப் பிறகு, பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்த வாடகைதாரா்கள், இலவச மின்சாரம் மற்றும் தண்ணீரின் பலன்களை அனுபவிப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்றாா் கேஜரிவால்.
பிப். 5-ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இலவச பயன்பாடுகள் மற்றும் மேம்பட்ட பொது சேவைகளை அதன் முக்கிய பலமாக கருதுகிறது.