தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு
கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி கே.வி.தாமஸ் ஆகியோரும் உடனிருந்த இந்தச் சந்திப்பு அதிகாரபூா்வமற்றது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு நிவாரண நிதி மற்றும் மத்திய நிதிகளில் மாநில அரசின் பங்கை முறையாக விடுவிக்காதது உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கும் கேரளத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இதற்கு பின்னணியில், கேரளம் எதிா்கொள்ளும் நிதி நெருக்கடிகள் குறித்து மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணும் மாநில அரசின் முயற்சியாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கேரளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக இடதுசாரி அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே மறைமுகமான புரிதல் ஏற்பட்டிருப்பதாக மாநில எதிா்க்கட்சி காங்கிரஸ் குற்றம் சாட்டியது. எனினும், சுமாா் 50 நிமிஷங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.