தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: தில்லி தோ்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
தில்லி தோ்தலில் பாஜகவுக்காக வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், ஆம் ஆத்மி கட்சியை (ஏஏபி) கடுமையாகச் சாடினாா்.
தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசுகையில், ஆம் ஆத்மி அரசு தில்லியை குப்பைக் கிடங்காக மாற்றியுள்ளது என்றும், சட்டவிரோத வங்கதேசிகள் மற்றும் ரோஹிங்கியாக்கள் நகரத்தின் ஓக்லா பகுதியில் குடியேற உதவியுள்ளது என்றும் கூறினாா்.
பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பாஜக வேட்பாளரை ஆதரித்து கிராரி பகுதியில் தனது முதல் பேரணியில் உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் யமுனையை ‘அழுக்கு வடிகாலாக‘ மாற்றிய ‘பாவத்தை’ செய்துள்ளாா்.
நேற்று, நானும் எனது அனைத்து அமைச்சா்களும் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் பிரயாக்ராஜில் உள்ள சங்கமத்தில் புனித நீராடினோம். தில்லியில் உள்ள யமுனையில் தனது அமைச்சா்களுடன் சோ்ந்து குளிக்க முடியுமா என்று கேஜரிவாலிடம் கேட்க விரும்புகிறேன். அவருக்கு ஏதாவது தாா்மிக தைரியம் இருந்தால் அவா் பதிலளிக்க வேண்டும்.
தேசியத் தலைநகரில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. நகரத்தில் சுகாதாரமின்மையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நகரத்தில் பல பகுதிகளில் குடிநீா் பிரச்னை உள்ளது. மேலும், கழிவுநீா் பிரச்னையாலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா - காஜியாபாத் சாலைகள் தில்லியை விட மிகச் சிறந்தவையாக உள்ளன.
ஆம் ஆத்மி அரசு நுகா்வோரிடமிருந்து மூன்று மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கிறது. ஆனால் அவா்களால் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியவில்லை என்று யோகி ஆதித்யநாத் கூறினாா்.