தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?
தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், புதன்கிழமை காலை நடைபெற்ற மக்களின் குறைகளை கேட்கும் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவை தலை முடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், முதல்வர் ரேகா குப்தா தலை, கன்னத்தில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குறைகேட்பு நிகழ்வின் போது முதல்வர் ரேகா குப்தா மீது நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்தை தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கடுமையாகக் கண்டித்துள்ளார். முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதான ராஜேஷ் பாய் சக்காரியா என்றும், அவர் ஒரு ‘நாய் பிரியர் (Dog Lover)’ என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உறவினர் தில்லி திகார் சிறையில் உள்ளதால், அவரைப் பார்ப்பதற்காக அவர் தில்லி வந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகின்றனர்.
இதுதொடர்பாக தாக்குதல் நடத்திய ராஜேஷ் பாய் சகாரியாவின் தாயார் பானு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜேஷ் ஒரு நாய் பிரியர், சமீபத்தில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.
ரிக்ஷா ஓட்டுநரான ராஜேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் சில நேரங்களில் வீட்டிலும் சிலரைத் தாக்குவார்” எனத் தெரிவித்தார்.
சமீபத்தில், தில்லியிலும் சுற்றியுள்ள புறநகர்களிலும் திரியும் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் காப்பங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதற்கு தில்லி முதல்வர் ரேகா குப்தா முதலில் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பின்னர் தெரு நாய்கள் மீது கடுமையான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.