TVK விஜய் மாநாடு: காரின் மேல் விழுந்த 1000 கிலோ எடை கொடிக்கம்பம்; நல்லவேளை, அந்தக் கார் இனோவா
பார்ப்பதற்குக் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது அந்தக் காட்சி. மதுரை பாரபத்தி எனும் இடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாநாடு நடக்கும் இடத்தில், 100 அடி உயர கம்பம் ஒன்று ஒரு காரின் மேல் விழுந்த அந்தக் காட்சி, பதைபதைப்பை ஏற்படுத்திவிட்டது. நல்லவேளையாக, காரின் உள்ளே யாரும் இல்லை என்பதால், யாருக்கும் எந்தக் காயங்களும் இல்லை என்பது மகிழ்ச்சி!

உண்மையில் ஆட்டோமொபைல் மொழியின்படி சொல்லப்போனால், ஒரு க்ராஷ் டெஸ்ட் நடந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். Global NCap என்பதுதான் இந்த க்ராஷ் டெஸ்ட்டின் உலகளாவிய பெயர். இந்தியாவுக்குள் நடப்பதை Bharat NCap என்று சொல்வார்கள். ஒரு காரை இதுபோன்ற பெரிய ராடுகளில் மோதவிட்டு, மேலே இருந்து தூக்கிப்போட்டு அந்த வாகனத்தின் பில்டு குவாலிட்டியைச் சோதனையிடுவதுதான் க்ராஷ் டெஸ்ட்.
விழுந்த அந்தக் கம்பத்தின் உயரம் 100 அடி; அதன் மொத்த எடை 10 டன். அதாவது, 1000 கிலோ. 100 அடி உயரத்தில் இருந்து 1000 கிலோ எடை கொண்ட ஒரு பொருள் விழுந்தால், அதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும்? விழுந்த வேகத்தில், அந்தக் கார் சில செமீ உயரத்துக்கு ஜம்ப் ஆகிறது. அந்தக் கார் டொயோட்டா நிறுவனத்தின் இனோவா என்று தெரிகிறது. இனோவா இருக்கும் இடத்தில் வேறு எந்தக் காரையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

டொயோட்டா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனம். டொயோட்டாவின் நம்பகத்தன்மைதான், இனோவா இன்னும் மார்க்கெட்டில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம். கார்களின் கட்டுமானத்தைப் பொருத்தவரை ஒரு 10 வகையான உலோகங்களைப் பயன்படுத்துவார்கள். ப்ளாஸ்டிக், ஸ்டீல், ரப்பர் அலுமினியம், கண்ணாடி, ஃபபைபர் கிளாஸ், லெட் (Lead), காப்பர், டைட்டானியம், மெக்னீஸியம் - என்று இவை எல்லாமே சேர்ந்ததுதான் ஒரு கார். டொயோட்டா இனோவாவின் கட்டுமானத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இதில் ஹைஸ்ட்ரென்த் ஸ்டீல் என்று ஒரு விஷயத்தைச் சேர்த்திருக்கிறார்கள். இதை எந்தளவு % அதிகமாகச் சேர்க்கிறோமோ, அந்தளவு அந்தக் கார் பில்டு குவாலிட்டியில் பட்டையைக் கிளப்பும்.
ரெகுலர் ஸ்டீலைவிட இது கொஞ்சம் சக்தி வாய்ந்த உலோகம். இதுதான் ஹைவேஸில் இனோவாவின் ஸ்டெபிலிட்டியை ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொள்கிறது. ரெகுலர் இனோவா காரைவிட இதனாலேயே இனோவா க்ரிஸ்டாவின் எடை 200 கிலோ அதிகம். டாடா, டொயோட்டா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ஆடி போன்ற நிறுவனங்கள், இந்த ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீலைத் தங்கள் கார்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவற்றை High-Tensile Steel என்றும் சொல்லலாம்.

டொயோட்டா நிறுவனம், GOA (Global Outstanding Assessment) எனும் திட்டத்தின்படி தங்கள் கார்களைத் தயாரித்து வருகிறது. கிண்ணென்ற லேடர் ஃப்ரேம் சேஸி கட்டுமானத்தின்படியும், விபத்து (Collision) நேரங்களில் காருக்கு ஏதும் ஆனாலும் பயணிகளின் உயிரைக் காக்கும் வண்ணம் Crumble Zone திட்டத்தின்படியும் இது டிசைன் செய்யப்பட்டிருக்கும் என்பதுதான் இனோவாவில் இன்னொரு பாராட்டக்கூடிய விஷயம்.
காருக்குள் யாரும் இருந்தாலும், ஒருவேளை இது காற்றுப்பைகளை வெளிப்படுத்தி உயிர்களைக் காத்திருக்கலாமோ?
இருந்தாலும், காரின் பம்பரில் கம்பத்தைக் கட்டி கொடி பறக்க விடுறதை மட்டும் இன்னும் எந்தக் கட்சியும் விடமாட்டேன் என்கிறதே!