Surya Sethupathi: "நான் தவறு செய்தாலும் அதை அடுத்தப் படத்தில் திருத்துவேன்!" - சூர்யா சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி நடித்திருந்த 'பீனிக்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் சூர்யா சேதுபதியின் காணொளிகள் சமூக வலைதளப் பக்கங்களில் ட்ரோல் செய்யப்பட்டன.

இதுபோன்ற எதிர்மறையான விஷயங்களைக் கையாள்வது தொடர்பாக சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "எங்கும் எதிர்மறையான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதை நம்மால் தடுக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் இதை எதிர்கொள்கிறார்கள்.
ஆனால் அதை எப்படிக் கையாள்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மனம் இதனால் பாதிக்கப்பட அனுமதிக்கக் கூடாது. நான் இதை அதிகம் மனதில் எடுத்துக்கொள்வதில்லை.
நான் ஏதாவது தவறு செய்தாலும், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். 'ஏன் இப்படி செய்தேன்?' என்று நினைத்து என்னைத் துன்பப்படுத்திக் கொள்வதில் நம்பிக்கை இல்லை.

'பீனிக்ஸ்' திரைப்படத்தைப் பலர் பாராட்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மிகுந்த முயற்சி செய்திருந்தோம், மக்கள் அதற்கு நேர்மறையாகப் பதிலளித்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் பாராட்டுதான் எங்களின் உழைப்புக்குக் கிடைத்த பலன். நான் பல பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்க விரும்புகிறேன். பார்வையாளர்கள் திரையரங்கில் செலவிடும் இரண்டரை மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதை அடைய தேவையானவற்றைச் செய்ய விரும்புகிறேன்.
தவறுகள் செய்தாலும், அடுத்த படத்தில் அவற்றைத் திருத்துவேன். மேலும், வேறு மொழிகளைக் கற்று, அந்தத் திரைப்படத் துறைகளில் பணியாற்றி, என் குரலிலேயே டப்பிங் செய்ய விரும்புகிறேன்." எனக் கூறியிருக்கிறார்.