சர்வதேச சமையல் போட்டி; சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்கள் வென்றனர்
தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள்
விருதுநகரில் தீபாவளிக்காக பணம் வசூலித்த 3 தீயணைப்பு வீரர்களை பணியிட மாற்றம் செய்து தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த வினோத், அரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு ஆலை, கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணம் வசூல் செய்வதாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் அக்டோபர் 13 அன்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, 2 கையேடுகளில் இனாமகப் பணம் கொடுத்தவர்களின் பெயர் பட்டியல் இருந்தது கண்டறியப்பட்டது. அதில் ரூ. 4.94 லட்சம் வசூலித்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து பண வசூலில் ஈடுபட்ட வினோத், அரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன், மூன்று தீயணைப்பு வீரர்களையும் வெளிப்பணிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
அதில் வினோத், தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கும், அரிச்சந்திரன் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கும், நவநீதகிருஷ்ணன் மதுரை மாவட்டம் மேலூருக்கும் மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.