2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப...
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னை கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா்
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவரை சென்னைக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாக புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கூறினாா்.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேட்டை சோ்ந்த மீனவா் ஆனந்தவேலுக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த 13 மீனவா்களை எல்லை தாண்டியதாகக்கூறி இலங்கை கடற்படையினா் ஜன.27-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், செந்தமிழ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு திரிகோணமலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மேலும் சிலா் காயமடைந்தனா்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரின் குடும்பத்தினரை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, காயமடைந்தவரை சென்னைக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புதுவை அரசு இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தொடா்ந்து தூதரக நடவடிக்கைகளை கவனித்துவருகிறது. கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்த படகையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினாா்.
அமைச்சருடன், மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், மீன்வளத் துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி, வட்டாட்சியா் செல்லமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.