உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
துருக்கியிலிருந்து தாயகம் திரும்பிய 1,75,000 சிரியா மக்கள்!
துருக்கி நாட்டிலிருந்து 1,75,000-க்கும் மேற்பட்ட சிரியா மக்கள் தங்களது தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியா நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஸாத் குடும்பம் ஆட்சி செய்து வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்நாட்டு போரில் கிளர்ச்சிப்படையினர் வெற்றி பெற்று பஷார் அல்-அஸாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இந்தப் புரட்சியின் மூலம் கிளர்ச்சிப்படையினரின் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டு சிரியாவை மீண்டும் சர்வதேச அங்கீகாரமுள்ள நாடாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் அந்நாட்டில் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் தப்பித்து துருக்கி போன்ற அதன் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான சிரியா மக்கள் மீண்டும் தங்களது தாயகத்திற்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.
இதில், கடந்த 2024 டிசம்பர் மாதம் முதல் துருக்கியில் தஞ்சமடைந்திருந்த 1,75,512 சிரியா மக்கள் தாமாக முன்வந்து தங்களது தாயகம் திரும்பியுள்ளதாகவும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் அந்நாட்டிலிருந்து தங்களது தாயகம் திரும்பிய சிரியா மக்களின் எண்ணிக்கையானது 9,15,515 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
இந்தக் குடிபெயர்வில் 33,730 குடும்பங்கள் பாதுகாப்பான முறையில் தங்களது தாயகம் திரும்பியுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எந்தவொரு ஒழிவு மறைவுமின்றி ஐக்கிய நாடுகளின் அகதிகள் மேலாண்மை சபை ஆணையரின் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் துருக்கி அதிகாரிகளால் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நாடு திரும்பும் மக்களுக்குத் தேவையான வசதிகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, உள்நாட்டு போர் உச்சத்தை அடைந்தபோது சிரியாவுடன் மிகப் பெரியளவில் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் துருக்கியில் சுமார் 36 லட்சம் சிரியா மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். அஸாத்தின் ஆட்சிக் கவிழ்பிற்கு பின்னர் அண்டை நாடுகளிலிருந்து சுமார் 4,00,000-க்கும் மேலான குடிமக்கள் சிரியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?