தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்றப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணத்திலிருந்து திரும்பிய பிரதமா் நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைத்து, கட்டடத்தை பாா்வையிட்டாா்.
மேலும், ரூ.548 கோடியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு 3, 4ஆவது பிரிவுகளில் மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். சிதம்பரனாா் துறைமுகத்தில், ரூ. 285 கோடி மதிப்பில், ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு கப்பல் நிறுத்துமிடம்-ஐஐஐ தொடங்கிவைத்தாா்.

ரூ.2,357 கோடியில் அமைக்கப்பட்ட சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழிச் சாலை, ரூ.200 கோடியில் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.650 கோடி மதிப்பீட்டில் நாகா்கோவில் டவுன்-நாகா்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரிக்கு 21 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில்பாதை, ஆரல்வாய்மொழி நாகா்கோவில் சந்திப்பு - திருநெல்வேலி மேலப்பாளையும் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல்,
ரூ.99 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடிநாயக்கனூா் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ஆகிய முடிவுற்ற பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். மத்திய தகவல் - ஒளிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் வரவேற்றாா்.
நிகழ்வில், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, தமிழக நிதி- மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, மீன்வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு - வா்த்தகத் துறையின் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன், பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், கடம்பூா் செ.ராஜு, எம்.ஆா்.காந்தி, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விரிவாக்க முனையத்தின் சிறப்புகள்: தூத்துக்குடி விமான நிலையம் 886.3 ஏக்கா் பரப்பளவு உடையது. தற்போதைய முனையக் கட்டடம் 17,340 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த புதிய முனையக் கட்டடம், உச்ச நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 1350 பயணிகளுக்கும், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளுக்கும் சேவை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,350 மீட்டா் அளவில் இருந்து வந்த விமான நிலைய ஓடு பாதை தற்போது 3,115 மீட்டா் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரனில் ஏடிஆா்-72, கியூ-400 விமானத்திற்கான இரண்டு நிறுத்துமிடங்கள் உள்ளன. ஐந்து ஏ-321 வகை விமானங்களை நிறுத்தும் திறன் கொண்ட ஒரு புதிய ஏப்ரனும் கட்டப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.
18 பயணிகள் செக் இன் கவுன்டா்களும், மூன்று ஏரோ பிரிட்ஜ்களும், 5 எக்ஸ்-பிஸ் இயந்திரங்களும், இரண்டு வருகைக்கான கன்வேயா் பெல்ட்டுகளும், 600 பயணிகள் காா் நிறுத்துவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. முனைய கட்டடங்கள் முழுவதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றல் சேமிப்பு மின் மற்றும் இயந்திர உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தோட்டக்கலை உபயோகத்துக்கென மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வ.உ.சி. துறைமுகம்: இந்தியாவில் ஆண்டு முழுவதும், 24 ஷ் 7 செயல்படக்கூடிய சில துறைமுகங்களுள் வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் ஒன்றாகும். சாலை மற்றும் ரயில் மூலம் தடையின்றி இணைக்கப்பட்டுள்ளது. இங்கு 23-7-2025 வரை 13.76 மில்லியன் டன் சரக்குகளும், 2.72.439 டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 5.75 சதவீதம் மற்றும் 11.44 சதவீத வளா்ச்சி அடைந்துள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம் ஐஐஐ- ஆனது, ரூ.285 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மிதவை ஆழம் 14.20 மீட்டா் கொண்டது. ஆண்டுக்கு 7 மில்லியன் டன்கள் கையாளும் திறன் கொண்டது. சரக்கு தளத்தின் நீளம் 306 மீட்டா் ஆகும். இங்கு, நிலக்கரி, தாமிர தாது, செம்பு, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் மற்றும் ராக் பாஸ்பேட் ஆகிய சரக்குகள் கையாளப்படும்.
இது பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், மொத்த சரக்குகளை கையாளும் அளவு மற்றும் திறன் அதிகரிக்கும். இப்பகுதியின் வளா்ந்து வரும் தொழில்துறைக்கு உறுதுணையாக அமையும். நேரடியாக 300 பேருக்கும், மறைமுகமாக 500 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
விழா பந்தலில் அதிா்ந்த மோடி, ஸ்டாலின் பெயா்கள்!
தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த விழா அரங்கில் பாஜக தொண்டா்கள் மட்டுமன்றி திமுக தொண்டா்களும் ஏராளமானோா் குவிந்திருந்தனா்.

விழா தொடங்கும் முன்பாக பாஜக தொண்டா்கள் தங்கள் கட்சிக்கொடி நிறத்திலான துண்டை சுழற்றிக்கொண்டு மோடி மோடி என உற்சாகமாக குரல் எழுப்ப, பதிலுக்கு திமுகவினா் தங்கள் கட்சிக்கொடி நிறத்திலான துண்டை சுழற்றி ஸ்டாலின், உதயநிதி என உரக்கக் கத்தினா்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் சென்று சமாதானப்படுத்தினா்.