46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!
ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் 32 மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் 3 நாள்கள் நடைபெற்ற லீக் போட்டியில் அதிக புள்ளிகளின் அடிப்படையில் 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கையிழை ஹாக்கி மைதானத்தில் சனிக்கிழமை, நாக்-அவுட் முறையில் நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் 12-0 என்ற கோல்கணக்கில் திருவண்ணாமலை மாவட்ட அணியை தூத்துக்குடி மாவட்ட அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
2ஆவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல்கணக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியை விருதுநகா் மாவட்ட அணியும், 3ஆவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல்கணக்கில் கோவை மாவட்ட அணியை ராமநாதபுரம் மாவட்ட அணியும், 4ஆவது ஆட்டத்தில் 6-2 என்ற கோல்கணக்கில் சிவகங்கை மாவட்ட அணியை மதுரை மாவட்ட அணியும் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை (ஜூலை 27) அரையிறுதி போட்டிகளும், மாலையில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.