சென்னையில் ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு
தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 148-வது ஆண்டு பெருவிழா
புதுச்சேரி வில்லியனூரில் மிகவும் பழமைவாய்ந்த தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 148-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டுச் சென்றனர்.
புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்று தொடர்ந்து பெருவிழா கொடியேற்றப்பட்டது. அதன்பிறகு ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைசாமி உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனர்.
திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் மற்றும் சிறிய தேர்ப்பவனி நிகழ்ச்சிகள் 9 நாள்கள் நடைபெற உள்ளன. மேலும் மே 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு புதுச்சேரி - கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருப்பலி நடைபெற்று, ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.
ஆண்டு பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை அதிபர் தந்தை ஆல்பர்ட் தலைமையில், விழா குழுவினர் மற்றும் வில்லியனூர் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.