மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 58,500 கன அடியாக அதிகரிப்பு
தென்காசியை மையமாக வைத்து மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை
தென்காசியை மையமாக வைத்து முதல் கட்டமாக 30 கிமீ சுற்றளவிற்கு மின்சார பேருந்து இயக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலா் எம்.சி.மருதுபாண்டியன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தென்காசி மாவட்டம் மிகப்பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆன்மிகம் மற்றும் சுற்றுலாவுக்காக குற்றாலம் பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியாக குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் உள்ளதால் அதிக காடுகளையும், மரங்களையும் உள்ளடக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.
அதிகமான வாகனங்கள் வந்து செல்வதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. அதிகளவு நச்சுப்புகை வெளியேறுகிறது. எனவே தென்காசியை மையமாக வைத்து முதற்கட்டமாக 30 கி.மீ சுற்றளவுக்கு குற்றாலம், பழையகுற்றாலம், ஐந்தருவி, திருமலைக்கோயில், செங்கோட்டை, புளியறை, மேக்கரை, தோரணமலை, சுரண்டை, பாவூா்சத்திரம், கடையநல்லூா் போன்ற பகுதிகளுக்கு மின்சார பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.
மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான இ சாா்ஜிங் நிலைமயம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கித் தர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.