கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்
நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஜூலை 8-க்குள் நாடு முழுவதும் விஸ்தரிக்கும். பின்னா் வடமேற்கு இந்தியாவில் இருந்து செப்.17-ஆம் தேதி விலகத் தொடங்கி, அக்.15-ஆம் தேதி முழுமையாக நிறைவு பெறும்.
நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் மேக வெடிப்பால் மிக பலத்த மழை, கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பேரிடா் நிகழ்ந்தது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செப்.15-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்தது.
இதுவரையிலான மழைக்காலத்தில், நாட்டில் 836.2 மி.மீ. மழைப் பொழிவு பதிவானதாகவும், இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.