தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!
தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்றும் குவாங்சு நகரம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில், கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல்வேறு இடங்களில் தீடீர் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மழையால் ஏற்பட்ட சம்பவங்களில் இதுவரை 4 பேர் பலியானதாகவும், நேற்று (ஜூலை 17) மாலை குவாங்சு நகர ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருவர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜூலை 18) தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாயமான 2 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் லீ ஜே மியூங், தலைமையில் நடைபெற்ற பேரிடர் கால ஆலோசனைக் கூட்டத்தில், துறைச் சார்ந்த அமைச்சகங்கள் மற்றும் அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதில், இன்று (ஜூலை 18) காலை 11 மணி நிலவரப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் இருந்து சுமார் 5,661 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், கனமழையால் 499 பொது மற்றும் 425 தனியார் சொத்துக்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், 328 சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, தென் கொரியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் உண்டான பாதிப்புகளினால், அந்நாட்டு அரசு வானிலை பேரிடருக்கான எச்சரிக்கையை உச்சக்கட்டத்துக்கு நேற்று (ஜூலை 17) உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!