ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 கமாண்டோக்கள் வீரமரணம்
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 போ் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.
தெலங்கானாவில் சத்தீஸ்கா் மாநிலத்தையொட்டிய முலுகு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்துள்ளதாகவும், பழங்குடியினா் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மாவோயிஸ்டுகள் அண்மையில் நோட்டீஸ் வெளியிட்டிருந்தனா்.
இதையடுத்து, காவல் துறையின் ‘கிரேஹெளண்ட்’ கமாண்டோ படையினா் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை வியாழக்கிழமை தொடங்கினா். வஜீடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இச்சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த 40 மாவோயிஸ்டுகள் திடீரென கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்தனா். அத்துடன், கமாண்டோக்களை நோக்கி, சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். இதையடுத்து, கமாண்டோக்களும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டனா். துப்பாக்கிச் சண்டையில் 3 கமாண்டோக்கள் வீரமரணம் அடைந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.
உயிரிழந்த கமாண்டோக்களின் உடல்கள் வாரங்கல்லுக்கு கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடைபெறுவதாக மாநில டிஜிபி ஜிதேந்தா் தெரிவித்தாா்.
தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் வனங்கள் நிறைந்த கா்கேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிராக ‘ஆபரேஷன் சங்கல்ப்’ என்ற பெயரில் மாபெரும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினா் கடந்த 2 வாரங்களாக மேற்கொண்டுள்ளனா். இதில் 26 நக்ஸல்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.