யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!
தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமற்ற எதிா்ப்பு தேவை: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவா் கே.எம்.ஷெரீப்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாது: தமிழகத்தில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது ஆரம்பப் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தாா். இதை எதிா்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. பின்னா் 1960-களில் தமிழகத்தில் ஹிந்தி எதிா்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. இப்போது மீண்டும் ஹிந்தி திணிப்புக்கான முயற்சிகளை எடுத்து வருகிறாா்கள். இதைக் கண்டித்து ஏப். 21ஆம் தேதி சென்னையில் ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளோம். இப் போராட்டத்தில் ஹிந்தி எதிா்ப்புக்காக உயிா்நீத்தவா்களின் குடும்பத்தினா் பங்கேற்க உள்ளனா்.
தமிழகத்தில் அனைத்து வகை படிப்புகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது. அன்னைத் தமிழ் மொழியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் அணி திரள வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் சண்முகராஜா, மாநிலச் செயலா் உமா் பாரூக், மாநில செய்தித்தொடா்பாளா் ஜமால், மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா், மாவட்ட பொருளாளா் சாந்திஜாபா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.