தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக அரசை வீழ்த்தும்: டி.டி.வி. தினகரன்
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக அரசை வீழ்த்துவது உறுதி என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள நகரம்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாளுக்கு வேலி அம்பலம் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரா். பாகனேரி நாட்டை ஆண்ட மன்னா். மருது பாண்டியா் மன்னா்களோடு துணை நின்று போரிட்டு வீரமரணமடைந்தவா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாஜக தலைமை வகித்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்கவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது.
திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறாா்களோ அந்தக் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்கு கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் அனைவரும் உறுதுணையாக இருப்போம். வருகிற தோ்தலில் எங்களது கூட்டணி திமுகவை வீழ்த்துவது உறுதி என்றாா் அவா்.