கொல்கத்தா சட்டக் கல்லூரியின் கதையையே மாற்றிய மோனோஜித்! அபாயப் பகுதியாக..
பள்ளி விடுதியில் மாணவி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்
பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், ஒச்சந்தட்டு விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாா்-முத்துலட்சுமி தம்பதியின் மகள் பிருந்தா (13). இவா் காளையாா்கோவில்-சூசையப்பா்பட்டினத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்தப் பள்ளிக்கு சொந்தமான ஆண்டிச்சூரணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்த பிருந்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காளையாா் கோவில் போலீஸாா், மாணவியின் உடலைக் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவித்து உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அமலஅட்வின் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து சிறுமியின் சடலம் கூறாய்வு செய்யப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட விடுதி நிா்வாகம் மீது தீண்டாமைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.