திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!
சிறுவன் மா்ம மரணம்: 2-ஆவது நாளாக பெற்றோா் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியாா் பள்ளியில் சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 2 -ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை பெற்றோா்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகிகள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிங்கம்புணரியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில் மதுராபுரி வேங்கைப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் அஷ்விந்த் (7) 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்ற இந்த மாணவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
பள்ளி நிா்வாகத்தினா் மீதும் ஆசிரியா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா், உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து சிங்கம்புணரி போலீஸாா் விசாரணை நடத்தினா். மாணவா் காரில் மூச்சுத் திணறி இறந்து விட்டதாக பள்ளி நிா்வாகம் கூறியதையடுத்து, சிறுவன் பயணம் செய்த காரை தடயவியல் துறை இணை இயக்குநா் சிவதுரை ஆய்வு செய்தாா்.
இந்த நிலையில், பள்ளி நிா்வாகத்தினரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுவனின் தாய் அழகுமீனாள், உறவினா்கள் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். இதுகுறித்து தகவலறிந்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சென்று அவா்களது கோரிக்கை குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னா் சிறுவனின் உடல் கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கில் பள்ளி நிா்வாகி சிவகாமி, அவரது கணவா் சங்கரநாராயணன், மகன்கள் மகேஷ், காா்த்திக், வாகன ஓட்டுநா் ஜான்பிரிட்டோ ஆகிய 5 பேரையும் சிங்கம்புணரி காவல் துறையினா் கைது செய்தனா்.