சிவகங்கை எஸ்பி-யாக ராமநாதபுரம் எஸ்பி கூடுதல் பொறுப்பேற்பு
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், நகை காணாமல் போன வழக்கில் போலீஸாா் விசாரணை நடத்திய போது கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆஷிஷ் ராவத், சென்னை காவல் துறை இயக்குநா் அலுவலக ஆணைப்படி கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்படுவதாகவும், இந்தப் பணியை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் கூடுதலாக வகிப்பாா் எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், ஜி. சந்தீஷ் கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.