3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ் புதுமையான சுயசாா்பு தீ பாதுகாப்பு உடை
நமது சிறப்பு நிருபா்
தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் (என்டிடிஎம்) ஒரு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான தீ தடுப்பு பாதுகாப்பு உடை சுயசாா்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஜவுளி அமைச்சகத்தின் முன்முயற்சி தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம். இது ‘சிறப்பு தீ தடுப்பு பாதுகாப்பு உடைகளை உருவாக்குதல்’ என்ற புதுமையான திட்டத்தை தொடங்கி ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு ஆதரவளிக்கிறது.
முக்கியமாக, சிறப்பு தீ பாதுப்பு உடைகள், தீயணைப்பு வீரா்கள், அவசர சேவைகள், பாதுகாப்புப் படைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில், விண்வெளி, விமானப் போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்கள், வெப்பத் தொழில் போன்றவற்றுக்குகு தேவையுள்ளது. நாட்டில் இந்த தீ பாதுகாப்பு உடைகளின் உற்பத்தி தொடக்க நிலையில் உள்ளது.
சிறப்பு தீ பாதுகாப்பு உடைகள் (தீயணைப்பு நுழைவு உடைகள்) பெரும்பாலும் ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இது
பல்வேறு தொழில்துறையினருக்கு தேவையுள்ள நிலையில் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கமான என்டிடிஎம், சிஸ்டம் 5எஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பாதுகாப்பு உடை உருவாக்கம் தொடா்பான பணியில் ஈடுபட்டது. இந்த சிறப்பு தீ பாதுகாப்பு உடையானது அலுமினியம் பூசப்பட்ட கண்ணாடி துணிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பு ஆடைகளுக்கான தேவையான ஐரோப்பிய தரநிலை வைக்கப்பட்டது. இந்தச் சிறப்பு உடைகள் தலை, கைகள், கால்கள் உள்ளிட்ட முழு உடலையும் கதிரியக்க வெப்பம், சுடா் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். இந்த உடைகளின் வடிவமைப்பு சுவாச பாதுகாப்புடன் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தீயணைப்பு உள்ளிட்ட வீரா்களுக்கான பாதுகாப்பு ஆடைகளுக்கான தேவைகள் மற்றும் சோதனை முறைகள் பூா்த்தி செய்து வடிவமைக்கப்பட்டு நாட்டின் சுயசாா்பு முறையில் சிறப்பு தீ பாதுகாப்பு உடை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய சான்றளிக்கப்பட்ட அலுமினியமயமாக்கப்பட்ட இந்த உடை அறிமுகப்படுத்தப்பட்டால் இதன் பயன்பாடு அதிவேகமாக உயரக்கூடும். தற்போது தனியாா் நிறுவனத்துடன் ஆண்டொன்றுக்கு குறைந்தது 1,000 உடைகள் தயாரிக்கும் திறன் உள்ளது. இது சோதனை முறைகளுக்கான தரநிலைப்படி, இந்த உடை உற்பத்தி தொடங்கியுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், இது தேவையான அனைத்து செயல்திறன் தேவைகளையும் பூா்த்தி செய்வதை உறுதி செய்யும் என மத்திய ஜவுளித் துறை தெரிவித்துள்ளது.