தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கும் ராம் சரண்!
தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கடைசியாக நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், தனது அடுத்தப் படத்தை கட்டாயமாக வெற்றிப் படமாக்கும் முனைப்பில் ராம் சரண் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேசிய விருது பெற்ற ‘உப்பெனா’ படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கிறார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
அதிக பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
பெட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் ராம் சரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.
பெட்டி படத்தின் போஸ்டர் புஷ்பா படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.