சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஏற்றம் கண்ட ஆட்டோ துறை பங்குகள்!
தேனி அருகே காா்- வேன் மோதல்: கேரளத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே சனிக்கிழமை காரும், வேனும் நேருக்கு நோ் மோதியதில் காரில் பயணம் செய்த கேரளத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு பகுதியைச் சோ்ந்த தாமஸ் மகன் செயின்ட் தாமஸ் (34), ஜோஸ் மகன் சோனிமோன் (43), மற்றொரு தாமஸ் மகன் ஜோபின்தாமஸ் (34), தேவசியாம் மகன் ஷாஜி (46) ஆகிய நால்வரும் நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு காரில் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள மலைச் சாலைப் பகுதியில் வந்த போது, இவா்களது காரும், தேனியிலிருந்து ஏற்காடு நோக்கிச் சென்ற வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் காரில் பயணம் செய்த செயின்ட் தாமஸ், சோனிமோன், ஜோபின் தாமஸ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
காரில் பயணம் செய்த ஷாஜி, வேனில் பயணம் செய்த தேனி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் செல்வக்குமாா் (44), சமதா்மபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் மனைவி சத்யா (36), மலைச் சாலை பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் மனைவி சியாமளா (35), பங்களாமேடு திட்டச் சாலைப் பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் மகன் குருபிரசாத் (17) உள்ளிட்ட 18 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, காயமடைந்தவா்கள் வத்தலகுண்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.